அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அண்மையில் திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் சொத்துக் குவிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியது அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் அங்கித் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்திருந்தனர். தொடர்ந்து மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் சோதனை செய்ய முயன்றபோது அமலாக்கத்துறை அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பாதுகாப்பாக துணை ராணுவம் அங்கு குவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் பிணை மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அமலாக்கத்துறை உதவி இயக்குநருக்கு மதுரை தல்லாகுளம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்த பொழுது பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் எழுந்த நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைஅதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த விவகாரத்தில் 15 அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை கொடுத்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவருடைய தனிப்பட்ட மடிக்கணினியில் ஊழல் வழக்குகளில் சிக்கிய 75 அதிகாரிகளின் பெயர்கள் இருந்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.