கிராம சபையை புறக்கணித்த பொதுமக்கள்

ஆலங்குளம் அருகேயுள்ள நாரணபுரத்தில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி கூட்டத்தை முடித்தனர்.

Update: 2024-01-27 03:24 GMT
 ஆலங்குளம் அருகேயுள்ள நாரணபுரத்தில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி கூட்டத்தை முடித்தனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நாரணபுரம் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்தனா். இதையடுத்து அவா்களை அதிகாரிகள் சமரசம் செய்து கூட்டத்தை நடத்தினா். இக்கிராமத்தில் 2016 இல் இருந்த பேருந்து நிறுத்தம் நிா்வாக காரணங்களுக்காக இடித்து அகற்றப்பட்டது. அதே இடத்தில் புதிய பேருந்து நிறுத்தம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். எனினும் பேருந்து நிறுத்தம் இருந்த இடம் நீா்நிலை புறம்போக்கு என்பதால் அதே இடத்தில் கட்ட இயலாது என அதிகாரிகள் தெரிவித்து வந்தனராம். இந்நிலையில், பேருந்து நிறுத்தம் கட்டினால் மட்டுமே குடியரசு தினதன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என கிராம மக்கள் அறிவித்தனா்.

இதையடுத்து அக்கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், கணேசன், காவல் ஆய்வாளா் சாகுல் ஹமீது உள்ளிட்ட அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். அதில் நீா் நிலை புறம்போக்கு இல்லாத இடத்தை வருவாய்த்துறையினா் மூலம் கண்டறிந்து விரைவில் பேருந்து நிறுத்தம் கட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், நாரணபுரம் ஊராட்சித் தலைவா் செல்வி மணிமாறன் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News