தமிழகத்தின் உரிமைகள்,உணர்வுகள் காப்பாற்றப்பட வேண்டும் - ஜோதிமணி
திமுக அரசு மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் ஒரு அழுத்தத்தை கொடுத்து வருகின்றனர். அதனை எதிர்த்து ஸ்டாலினும், ராகுலும் களத்தில் நிற்கின்றனர். தமிழகத்தின் உரிமைகளையும், உணர்வுகளையும் காக்க வேண்டும். இந்தியாவை அமைதியான, அன்பான, மகிழ்ச்சியான நாடாக உருவாக்க வேண்டும் என பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடம் ஜோதிமணி தெரிவித்தார்.
தமிழகத்தின் உரிமைகளையும் உணர்வுகளையும் காப்பாற்றப்பட வேண்டும்- கரூரில் ஜோதிமணி விளக்கம். கரூர் நாடாளுமன்ற தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் கரூர் எம்பி ஜோதிமணி மீண்டும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனது பிரச்சார பயணத்தை துவக்கினார். மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் ஜோதிமணிக்கு பூரண கும்ப மரியாதையும், ஆரத்தியும் எடுத்து, பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
அப்போது அங்கு திரண்டு இருந்த பொது மக்களிடையே பேசிய ஜோதிமணி, இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தமக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார் மேலும், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சி வங்கி கணக்கை முடக்கி வைத்தனர். 1993 முதல் இப்போது வரை ரூபாய் 1,750 கோடி அபராதமாக செலுத்த கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் 1,170- கோடி கூட தற்போது நிதி இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி கட்ட முடியும்.
காங்கிரஸ் வேட்பாளரிடம் போதிய பணம் இல்லை. அதே போல கட்சியிலும் பணம் இல்லை. அந்த அளவுக்கு தேர்தலில் காங்கிரஸின் செயல்பாடுகளை முடக்கும் வேலையை செய்து வருகின்றனர். திமுக அரசு மீதும், கட்சி மீதும் ஒரு அழுத்தத்தை கொடுத்து வருகின்றனர். அதனை எதிர்த்து ஸ்டாலினும், ராகுலும் களத்தில் நிற்கின்றனர். தமிழகத்தின் உரிமைகளையும், உணர்வுகளையும் காக்க வேண்டும். இந்தியா அமைதியான, அன்பான, மகிழ்ச்சியான நாடாக உருவாக்க வேண்டும் என நினைத்து தேர்தலில் நிற்பதாக தெரிவித்தார்.