கழிவுநீர் கலப்பால் சுவை மாறிய பாலாற்று குடிநீர் - கிராம மக்கள் புலம்பல் ....
வேகவதி ஆற்றில் வரும் தண்ணீர், திம்மராஜம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சீயமங்கலம் அருகே பாலாற்றில் கலக்கிறது. தற்போது, தண்ணீர் உவர்ப்பாக சுவை மாறி வருகிறது.
By : King 24x7 Angel
Update: 2024-04-04 07:20 GMT
"பாலாற்றங்கரையொட்டி உள்ள பல்வேறு கிராமங்களுக்கு பாலாறு குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. பாலாற்றில் ஆழ்த்துளை கிணறு அமைத்து அதன் மூலம் உறிஞ்சப்படும் தண்ணீரை ஊராட்சிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் ஏற்றி வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பாலாற்று தண்ணீரை குடிநீராக உபயோகிக்கும் திம்மராஜம்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், சில மாதங்களாக பாலாற்று குடிநீர் சுவையற்ற நீராக தரமற்றதாக மாறி உள்ளதாக இப்பகுதியினர் கூறி வருகின்றனர். இதுகுறித்து, திம்மராஜம்பேட்டை கிராமத்தினர் கூறியதாவது: காஞ்சிபுரத்தில் இருந்து, அய்யம்பேட்டை, ஏகனாம்பேட்டை வழியாக, வேகவதி ஆற்றில் வரும் தண்ணீர், திம்மராஜம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சீயமங்கலம் அருகே பாலாற்றில் கலக்கிறது. தற்போது, தண்ணீர் உவர்ப்பாக சுவை மாறி வருகிறது. இதற்கு காரணம் வேகவதி ஆற்றில் இருந்து வந்து பாலாற்றில் கலக்கும் தண்ணீர் மாசு கலந்த தண்ணீராக உள்ளது. அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீர், தோல் மற்றும் ரசாயன கழிவுகள், உணவக கழிவுகளும், வீட்டு கழிவுநீரும் வேகவதி ஆற்று வழியாக பாலாற்றில் கலக்கிறது. இதனால், தண்ணீர் துர்நாற்றம் ஏற்பட்டு குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாலாற்று நீர் வளம் மற்றும் மண் வளம் நஞ்சாவதை தவிர்க்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்."