வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு கோரி, தொழிற்சங்கத்தினர் பிரசாரம்
வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி, அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள், பேராவூரணி கடைவீதியில் வர்த்தகர்கள், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டினர்.;
Update: 2024-01-03 02:30 GMT
துண்டு பிரசுரம் விநியோகம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிக்கால பணப் பலன்களை வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு, நிலுவையை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி, நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையம், ரயிலடி, கடைவீதி, சேது சாலை, முதன்மைச் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நடைபெற உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தை விளக்கி, பொதுமக்களின் ஆதரவை கேட்டு துண்டுப் பிரசுரங்கள் வழங்கிப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரச்சார இயக்கத்திற்கு, சிஐடியு மத்திய சங்கத் தலைவர் டி.காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார். ஓய்வு பெற்றோர் சங்க (ரிவா) மண்டலத் தலைவர் பாஸ்கர், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வீரையன், சிஐடியு மத்திய சங்க துணை தலைவர் நவநீதன், கிளைச் செயலாளர் ரகு, பொருளாளர் முருகானந்தம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கினர்.