இரண்டு மாதமாக முடங்கிய நிலையில் கிராம சாலை
இரண்டு மாதமாக முடங்கிய நிலையில் கிராம சாலை பணிகளால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
By : King 24x7 Website
Update: 2023-10-28 10:40 GMT
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை கிராம ஊராட்சிக்கு உட்பட்டது உன்னங்குளம் கிராமம். இங்கு முக்கிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் குறுக்கு சாலை உள்ளது. இரணியல்-ராஜாக்கமங்கலம் சாலை, மணவிளை-குருந்தன்கோடு நெடுஞ்சாலையை இந்த குறுக்கு சாலை இணைக்கிறது. உன்னங்குளம் சந்திப்பில் இருந்து மணவிளை கூட்டுறவு சங்க அலுவலகம் வரையிலான 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிராம சாலை திட்டத்தில் ஏற்கனவே தரமற்று காணப்பட்ட தார்சாலையை அகற்றி புதிதாக சாலை போடும் பணி ஆகஸ்டு மாத இறுதியில் துவங்கப்பட்டது. இடையில் பெய்த கனமழையை காரணம் காட்டி சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதில் சாலை ஓரத்தில் தார் அமைப்பதற்காக ஜல்லி கற்களை 3 வாரங்களுக்கு மேல் குவித்து வைத்துள்ளனர். இதனால் அவ்வழியாக இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆமை வேகத்தில் நடந்து வரும் இச்சாலை பணியால் உன்னங்குளம் கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்களும் பெரும் பாதிப்பிற்கள்ளாகி வருகின்றனர். உன்னங்குளம் குறுக்கு சாலை வழியாக 15க்கும் மேற்பட்ட கிராம பகுதி மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் சாலை சீரமைப்பு பணியை வேகப்படுத்தி முடிக்காவிட்டால் உன்னங்குளம் சந்திப்பில் கிராம மக்கள் போராட்டம் நடத்துவதாத அப்பகுதியினர் அறிவித்துள்ளனர்.