டூவீலரில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் திருட்டு - வாலிபர் கைது
கரூரில் டூவீலரில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை திருடியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுகா, கடம்பன்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் முரளி வயது 45. இவர் ஜூன் 12-ம் தேதி மதியம் 2 மணி அளவில், கரூரில் உள்ள அம்மன் திருமண மண்டபம் அருகே தனது டூ வீலரை நிறுத்தி இருந்தார். அப்போது அந்த டூவீலரில் ஒரு பையில் ரூபாய் 50 ஆயிரம் வைத்து இருந்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் தனது டூவீலரை பார்த்தபோது, பணம் வைத்திருந்த பை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்பகுதியில் உள்ளவரிடம் தனது பணப்பை குறித்து விசாரித்தார்.
ஆயினும்,எந்த தகவலும் கிடைக்காதாததால், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், இது தொடர்பாக நடத்திய விசாரணையில்,கரூர், வேலுச்சாமிபுரம், திருவள்ளூர் நகர், நாலாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் ஆறுமுகம் வயது 42 என்பவர் அந்த பணப்பையை களவாடியது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
சிறையில் அடைக்கப்பட்ட ஆறுமுகம் மீது, கரூர், பசுபதிபாளையம், வெங்கமேடு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி, அனுப்பர்பாளையம், கோவையில் உள்ள பீளமேடு,ஈரோட்டில் உள்ள கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் சுமார் 47 குற்ற வழக்குகள் இருந்தது தெரிய வந்தது.