சாலவாக்கத்தில் சீரமைப்பு சாலையில் மண் அணைக்காததால் பள்ளம்

சாலவாக்கத்தில் சீரமைப்பு சாலையில் மண் அணைக்காததால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-06-18 11:55 GMT

சாலையில் உள்ள பள்ளம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில் இருந்து, மெய்யூர்ஓடை, இடையாம்புதூர் வழியாக திருப்புலிவனம் செல்லும் சாலை உள்ளது. சுற்றியுள்ள கிராமத்தினர் இச்சாலையை பயன்படுத்தி, உத்திரமேரூர் சென்று வருகின்றனர்.

இச்சாலையில், சாலவாக்கம்- மெய்யூர்ஓடை வரையிலான சாலை மிகவும் குறுகியதாகவும், சிதலமடைந்தும் இருந்தது. இதனால், இச்சாலையை அகலப்படுத்த வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, சாலவாக்கம் அடுத்த ஒரு கி.மீ., தூரம் வரையிலான இச்சாலை, மழை வெள்ளம் சேதம் நிதியின் கீழ், 63 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது.

இந்த புதியதான தார் சாலையில், ஒருபுறம் மட்டுமே மண் கொட்டி அணைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புற சாலையோரம் மண் கொட்டி சமப்படுத்தாமல் பள்ளமாக உள்ளது. இதனால், பேருந்து, லாரி, வேன் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் எதிரே வந்தால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஒதுங்கி நிற்பதற்குகூட இடம் இல்லாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, இச்சாலையின் மற்றொரு புறத்திலும் மண் அணைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News