புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி
மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சமய நல்லிணக்க விழாவாக நடைபெற்ற தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவின் முதல் நிகழ்வாக சிறப்பு திருப்பலி மற்றும் திருத்தேர் பவனி நடைபெற்றது. வல்லம் பங்குத்தந்தை சூசைஅருள் அடிகளார் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் “செல்வத்தை அல்ல கடவுளை நம்புவோர் தளிரென தழைப்பர்” என்ற இறைவார்த்தையை மையப்படுத்தி குடந்தை மறைமாவட்ட வேந்தர் பெல்பிட் ஆண்டனி அடிகளார் மறையுரை ஆற்றினார்.
இந்த சிறப்பு திருப்பலியில் அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் உலக அமைதிக்காகவும், விவசாயம் செழிக்கவும், இயற்கை பேரிடர் பாதிப்புகளிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படவும், மனிதநேயம் நிலைத்திடவும் வேண்டி மக்களோடு இணைந்து சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடத்தினார். கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற சமயத்தவரும் நல்லிணக்கத்தோடு கொண்டாடும் புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர்பவனி நடைபெற்றது. புனித மைக்கேல் சம்மனசு, புனித ஆரோக்கியநாதர், புனித செபஸ்தியார், புனித ஆரோக்கியமாதா, புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார்களின் திருஉருவம் தாங்கிய ஐந்து தேர்கள் ஆலய வளாகத்தில் தொடங்கி, கொண்டாரெட்டித்தெரு, அழகப்ப செட்டித்தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அன்பிய குழுவினர், பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.