பேதங்களை ஒழிக்க பேராவூரணியில் திருக்குறள் பேரணி

பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வருண, சாதியக் கோட்பாடுகளுக்கு எதிராக பிறப்பால் அனைவரும் சமம் என்னும் அறநெறி கொண்ட திருக்குறளைத் தமிழ்நாடு எங்கும் பரப்பும் தொண்டறத்தின் தொடக்கமாக பேராவூரணியில் பேரணி நடத்துவது என அனைத்து கட்சி,இயக்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-02-25 14:26 GMT

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் தலைப்பில் பேராவூரணி நகரில் மாபெரும் திருக்குறள் பேரணி நடத்துவதற்கான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நேற்று 24. 02. 2024 சனி காலை 10 மணிக்கு பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் முனைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். திராவிடர் கழகம் சார்பில் மகாராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜெயராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்பையா, அமரா அழகு, அறநெறி மக்கள் கட்சி சார்பில் ஆயர் ஜேம்ஸ், தமிழ் வழிக் கல்வி இயக்கம் சார்பில் நா. வெங்கடேசன், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் சார்பில் அனல் ச.ரவீந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கவிதாசன், ரமேஷ், பொதுமக்கள் சார்பில் திருக்குறள் தங்கவேலனார், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் சார்பில் மொழியமுதன், கவி முருகன், ஈஸ்டர் ராஜ், ஏ எஸ் மதி, ஊடகவியலாளர்கள் சார்பில் மாலை முரசு நிருபர் வெள்ளிமலை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் ரெட்டவயல் கிளைச் செயலாளர் கே வி முத்தையா நன்றி கூறினார். வரும் மார்ச் 10ஆம் தேதி பேராவூரணி நகரில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் தலைப்பில் 1330 பேர் கொண்ட மாபெரும் திருக்குறள் பேரணியை சிறப்பாக நடத்துவது எனவும் பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வருண, சாதியக் கோட்பாடுகளுக்கு எதிராக பிறப்பால் அனைவரும் சமம் என்னும் அறநெறி கொண்ட திருக்குறளைத் தமிழ்நாடு எங்கும் பரப்பும் தொண்டறத்தின் தொடக்கமாக பேராவூரணியில் இந்தப் பேரணி நடத்துவது எனவும் இதற்கு அனைத்து இயக்கங்களும் ஒத்துழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது

Tags:    

Similar News