தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு
தீபத் திருநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா்.;
தீபத்திருவிழாவிற்கு சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற தீப திருநாள் நவ.26-ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து, நவ.27-ஆம் தேதி பெளா்ணமி தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கானோா் திருவண்ணாமலைக்கு பயணிப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், பயணிகளின் வசதிக்காக நவ.25, 26, 27 ஆகிய நாட்களில் சென்னை உட்பட தமிழகத்தின் பிற முக்கிய நகரங்கள், அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்தும் திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையிலிருந்து பிற இடங்களுக்கும் 2,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, அதிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 கட்டணமில்லா சிற்றுந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.