திருவண்ணாமலை : மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டி
திருவண்ணாமலையில் நடைபெற்ற 41- வது மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை சென்னை அணி தட்டி சென்றது.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு மாநில மூத்தோர் தடகள சங்கம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில் 41-வது மாநில அளவிலான மூத்தோரர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 15-ந் தேதி தொடங்கி மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.
இந்த போட்டியில் சென்னை, கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், ராணிபேட்டை, தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்ளில் இருந்து2500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 30 வயது முதல் 85 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்றனர். இதில் 100 மீட்டர் முதல் 10 ஆயிரம் மீட்டர் வரை ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், மும்முறை தாண்டுதல் என பல்வேறு போட்டிகள் வீரர், வீராங்கனைகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனுக்குடன் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் இன்று மாலை மாவட்ட விளையாட்டு அரங்கில் இப்போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத் தலைவர் கார்த்திவேல்மாறன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பு அழைப்பாளராக மாநில தடகள சங்கத் துணைத் தலைவரும், அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ இயக்குனருமான டாக்டர் எ.வ.வே. கம்பன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளையும் நினைவு பரிசுகளையும் வழங்கி கௌரவித்தார்.
போட்டியில் தங்கம்,வெள்ளி, வெண்கலம் என 227 பதக்கங்களை வென்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு அவர் கோப்பையை வழங்கி பாராட்டினார். மேலும் ஆண்கள் பிரிவிற்கான சாம்பியன்ஷிப் கோப்பையைம், பெண்கள் பிரிவிற்கான சாம்பியன்ஷின் கோப்பையைம் சென்னை அணியினரே தட்டி சென்றனர். ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையில் 2-ம் இடத்தை 103 பதக்கங்கள் வென்று கோவை அணியினரும், 3-ம் இடத்தை 61 பதக்கங்களை வென்று திருச்சி அணியினரும் பெற்றனர்.