"இது மோடி சுட்ட வடை" என்று அச்சிடப்பட்ட நோட்டீஸில் வைத்து உளுந்து வடை வழங்கிய திமுகவினர்
தேனியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு "இது மோடி சுட்ட வடை" என்று அச்சிடப்பட்ட நோட்டீஸில் வைத்து உளுந்து வடை வழங்கிய திமுகவினர்.
Update: 2024-03-05 03:58 GMT
தேனியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு "இது மோடி சுட்ட வடை" என்று அச்சிடப்பட்ட நோட்டீஸில் வைத்து உளுந்து வடை வழங்கிய திமுகவினர். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு "எல்லாருக்கும் எல்லாம்" என்ற தலைப்பில் திமுக தேனி வடக்கு மாவட்டம் சார்பில் இன்று தேனியில் பொதுக்கூட்டம் நடந்தது. தேனி அல்லிநகரம் பகுதியில் திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து உரையாற்றினார். அப்போது தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை, இரண்டு ஆண்டு கால சாதனைகள் குறித்து விளக்கி பேசினார். மேலும் மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக கூறி பேசினார். இக்கூட்டத்தில் திமுக தேனி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டத்தில் பந்கேற்க வருகை பொதுமக்களுக்கு பிரதமர் மோடியின் உருவப்படம் அச்சிடப்பட்ட முகமூடி அணிந்து" இது மோடி சுட்ட வடை" என்று அச்சிடப்பட்ட நோட்டீஸில் வைத்து திமுகவினர் உளுந்து வடை வழங்கினர். அந்த நோட்டீஸில், பிரதமர் மோடியின் புகைப்படத்தை அச்சிட்டு எய்ம்ஸ் கட்டியாச்சா? 15 லட்சம் பணம் என்னாச்சு? கருப்பு பணம் மீட்பு என்னாச்சு? உள்ளிட்ட வாசகங்களுடன், வரும்போதெல்லாம் வடை தான் நீங்க சுடுறீங்க! சொன்னதை எப்போது செய்வீங்க? என குறிப்பிடப்பட்டிருந்தது.