திருவைகுண்டம் வட்டத்தில் 2வது நாளாக ஆட்சியர் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்” திட்டத்தின் கீழ் திருவைகுண்டம் வட்டத்தில் இன்று 2வது நாளாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி களஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-23 06:55 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற சிறப்பான திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தியுள்ளார். 

அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்றைய தினம் (21.02.2024) மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, திருவைகுண்டம் வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்/சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

அந்த வகையில் திருவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கனிவுடன் கேட்டறிந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.

தொடர்ந்து, திருவைகுண்டம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள வாழை முதன்மைப் பதப்படுத்தும் நிலையத்தில் வாழை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய இலை, தண்டு, பூ ஆகியவற்றை மதிப்புக் கூட்டுப் பொருட்களாக தயார் செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாழை மரத்தினை இன்னும் அதிகப்படியாக கொள்முதல் செய்து, வேளாண் வணிகத்தை பெருக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். 

திருவைகுண்டம் அரசினர் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உணவின் தரம் ஆகியவற்றை பார்வையிட்டு மாணவியர்களுடன் கலந்துரையாடினார். திருவைகுண்டம் உப மின் நிலையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்தல், நுகர்வோர்களிடமிருந்து வரக்கூடிய புகார்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல், புதிய மின் இணைப்புகள் விரைந்து வழங்குதல் போன்ற பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். அன்றைய தினம் இரவு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, திருவைகுண்டம் நீர்வள ஆதாரத்துறை ஆய்வு மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.

மறுநாள் (22.02.2024) காலையில் திருவைகுண்டம் வட்டம் வெள்ளூர் ஊராட்சிப் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு மற்றும் குளோரின் சரியான அளவில் உள்ளதா என்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

பின்னர் திருவைகுண்டம் மகப்பேறு பிரிவு மற்றும் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, கர்ப்பிணிகளுக்கு, புறநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருந்து பொருட்களின் இருப்பு குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிந்து, உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் சமைக்கக்கூடிய சமையலறையினை பார்வையிட்டார்கள். 

திருவைகுண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு செயல்பட்டுவரும் மழைமானியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, மழையளவினை அளவீடு செய்யும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்கள். திருவைகுண்டம் வட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, காலை உணவு திட்ட ஊழியர்களிடம் உணவுகள் சரியான முறையில் வருகிறதா, உணவுகள் தரம் குறித்து ஆய்வு செய்து சரியான முறையில் மாணவ மாணவியர்களுக்கு பரிமாறப்படுகிறதா என கேட்டறிந்து, மாணவர்களுடன் உணவு அருந்தினார்கள்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், திட்ட இயக்குநர் (த.மா.ஊ.வா.இ) வீரபத்திரன், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சாந்தி ராணி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.பொற்செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின் ராணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாணயம், திருவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், செயல் அலுவலர் (வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், திருவைகுண்டம்) எழில்,உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News