மீனவர் வலையில் சிக்கிய டைகர் இறால் !
அதிராம்பட்டினம் பகுதியில் மீனவர் வலையில் சீசன் மாறி சிக்கிய டைகர் இறால் கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-03-14 05:39 GMT
அதிராம்பட்டினம் பகுதியில் மீனவர் வலையில் சீசன் மாறி சிக்கிய டைகர் இறால் கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதிராம்பட்டினம் கடலோர பகுதிகளான கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுகக் கிட்டங்கிதெரு, ஏரிப் புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் வலையில் டைகர் இறால் சிக்கியது. இந்த இறால் அதிராம்பட்டினம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே கிலோ ரூ.600-க்கு விற்பனையானது. டைகர் வகையான இறால் அதிராம்பட்டினம் அலையாத்திக்காடு பகுதிகளில் மழைக்காலங்களில் கடல் நீரும், மழை நீரும் சேரும் இடத்தில் இனப்பெருக்கம் செய்யும். அதாவது அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் டைகர் இறால் மீனவர்கள் வலையில் சிக்கும். ஆனால் இந்த ஆண்டு ஒரு டைகர் இறால் கூட மீனவர்கள் வலையில் சிக்கவில்லை. தற்போது சீசன் மாறி மார்ச் மாதத்தில் ஒரு மீனவர் வலையில் 5 கிலோ டைகர் இறால் சிக்கியுள்ளது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில் அதிராம்பட்டினம் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதாலும், கடலில் மீன் இனப்பெருக்கத்துக்கு காரணமாக உள்ள கடல் தாவரங்கள், பவளப்பாறைகள் அழிந்து வருவதாலும் கடலில் மீன் வளம் குறைந்து வருகிறது. இதனால் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள மீனவர்கள் மட்டுமல்லாமல், கடல் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுவரும் ஏராளமானவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் அலையாத்திக் காடுகள் உள்ளதால் இறால் உற்பத்தி மற்றும் நண்டு அதிகளவில் கிடைக்கும். இறால்களில் ஒயிட் இறால், டைகர் இறால், கருப்பு இறால், பிளவர் இறால், தாழை இறால் என பலவகை யான இறால்களும் இந்த பகுதியில் அதிகம் சிக்கும். மேலும் இந்த பகுதியில் சிக்கும் இறால்கள் உணவுக்கு ஏற்றவகையில் நல்ல ருசியாக இருக்கும். இதன் காரணமாக அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இறால்களின் வரத்து குறைந்து விட்டதால் மீனவர்களும், உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.முன்பு கொடி கட்டிப் பறந்த இறால் ஏற்றுமதியும் தற்போது மந்தமான நிலையில் உள்ளது என்றனர்.