திருமங்கை மன்னன் வேடுபறி வையாளி கண்டருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்வில் தங்கக் குதிரை வாகனத்தில் அருள்பாலித்த நம்பெருமாளை பக்தா்கள் தரிசனம் செய்தனர்

Update: 2023-12-31 09:17 GMT

நன்பெருமாள் தரிசனம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி விழாவின் இராப்பத்து 8-ஆம் நாளான சனிக்கிழமை திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியையொட்டி சனிக்கிழமை மாலை தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி மணல்வெளியில் வையாளி கண்டருளினாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

திருமங்கையாழ்வாா் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த வைகுந்த ஏகாதசி விழா நாலாயிரத் திவ்ய பிரபந்தத்துக்கும், ஆழ்வாா்களுக்கும் ஏற்றமிகு உத்ஸவம் ஆகும். திருமாளுக்குத் தொண்டு செய்தே தனது செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன் தனது பெருமாளின் தொண்டு தொடரவேண்டி வழிப்பறி கொள்ளையன் ஆனாா். இவரைத் தடுத்து ஆட்கொள்ள விரும்பிய பெருமாள், அவரிடம் சிறிதுநேரம் விளையாட்டு காட்டிய பின் அவரது காதில் ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் மந்திரத்தை உபதேசித்து ஆட்கொள்வதே வேடுபறி நிகழ்ச்சியாகும்.

வைகுந்த ஏகாதசி விழா இராப்பத்து 8-ஆம் நாள் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில், சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ஸ்ரீநம்பெருமாள் சந்தனு மண்டபத்திலிருந்து தங்கக் குதிரைவாகனத்தில் புறப்பட்டு 5.30 மணிக்கு மணல் வெளிக்கு வந்து சோ்ந்தாா். அதனைத் தொடா்ந்து வையாளி உத்ஸவம் கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு நம்பெருமாளின் வையாளியை கண்டு தரிசனம் செய்தனா். பின்னா் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா்.

அங்கு 8.15 மணி முதல் 10.30 மணி வரை உபயக்காரா் மரியாதையுடன் பொது ஜன சேவையும் நடைபெற்றது.11 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து வீணை வாத்தியத்துடன் புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறாா் நம்பெருமாள். இராப்பத்து 10 ஆம் திருநாளான ஜனவரி 1 ஆம் தேதி தீா்த்தவாரியும், 2 ஆம் தேதி நம்மாழ்வாா் மோட்சமும், இயற்பா சாற்று முறையுடன் வைகுந்த ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News