பாதாள சாக்கடை பணியால் சகதியான திருவள்ளூர் சாலை
பருவமழை துவங்குவதற்கு முன், பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் பாதாள சாக்கடை திட்ட பணிகள், மந்த கதியில் நடைபெற்று வருவதால், லேசான மழைக்கே சகதியான திருவள்ளூர் சாலையில் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுகின்றனர். ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 10,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 50,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, 2013ல், 77.11 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை பணிகள் துவங்கின. அதன்பின், 11 ஆண்டுகளாக பெயரளவிற்கு நடந்து பின் எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு பாதாள சாக்கடை பணிகள் துவங்கி நடந்து வந்தன. இதற்காக, ஸ்ரீபெரும்புதுார் -- திருவள்ளூர் சாலையில், பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மந்தகதியில் நடைபெற்று வரும் பணியால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். நேற்று முன்தினம் பெய்த மழையினால், சாலை சகதியாக மாறியுள்ளது. இதில், செல்லும் இருசக்கரம் வாகன ஓட்டிகள் சேற்றில் சறுக்கிய நிலையில் சென்று வருகின்றனர்.
இதனால், காலை மற்றும் மாலை 'பீக் ஹவர்' நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே, பருவமழை துவங்குவதற்கு முன், பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.