கன்னியாகுமரியில் தமிழ்நாடு சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு தலைவர் தலைமையில், 18 குழு உறுப்பினர்கள் , இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு தலைவர் அ.சௌந்தரபாண்டியன் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர், குழு உறுப்பினர்கள் 18 பேர் , இன்று (05.02.2024) கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 2 நாட்கள் நடைபெறும் ஆய்வில் இன்று காலை முப்பந்தல் டால்மியா காற்றாலை நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு மின் உற்பத்திதிறன் உள்ளிட்டவை குறித்து நிறுவன மேலாளரிடம் கேட்டறியப்பட்டது.
தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தினை ஆய்வு மேற்கொண்டதோடு, ரூ.37 கோடி மதிப்பில் கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகனாந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டனர்.
மேலும் கன்னியாகுமரி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மற்றும் பேருந்து நிலையம், மணவாளக்குறிச்சி மணல் ஆலை தொழிற்சாலை (IREL), நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் தாட்கோ மூலமாக கடன் உதவி பெற்று, தொழில்புரிந்து வரும் பயனாளியை நேரில் சந்தித்து இந்த கடன் உதவி எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்குகிறது என கேட்டறியப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, சட்டமன்ற பேரவை இணை செயலாளர் பாண்டியன், செயற்பொறியாளர் வெள்ளைசாமி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அனில்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.