தருமபுரி மாவட்டத்தில் தக்காளி விலை உயர்வு
தருமபுரி மாவட்டத்தில் விளைச்சல் சரிவால், சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது .உழவர் சந்தையில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.28க்கு விற்பனை செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில், 6 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, தருமபுரி, காரிமங்கலம், பென்னாகரம், இருமத்தூர், கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபடுகின்றனர். தினசரி சராசரியாக 100டன் முதல் 150 டன் அளவிற்கு தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. உள்ளூர் தேவைக்கு பின், தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்டம் ராயக்கோட்டை, ஓசூர் பத்தனப்பள்ளி, பாலக்கோடு தக்காளி சந்தையில் இருந்து கேரளா, கர்நாடகா, மும்பை, கல்கத்தா போன்ற இடங்களுக்கு தக்காளி அனுப்பப்படுகிறது. சில நேரங்களில் அந்தந்த பகுதிகளில் தக்காளி அதிக விளைச்சல் வரும்போது தக்காளி தேக்கம் ஏற்பட்டு விலை வீழ்ச்சி அடைகிறது. மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் இருப்பதால், வெளி மாவட்டங்களுக்கு அதிகளவில் தருமபுரி தக்காளி செல்கிறது. இதனால் தருமபுரி மாவட்ட சந்தைகளுக்கு தக்காளி வரத்து சரிந்து காணப்படுகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தருமபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.23 முதல் ரூ.28க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டில் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது.