திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.அருவியில் குறைந்த அளவே கொட்டும் நீரிலும் கோடை வெயிலை தணிக்க சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் இட்டனர்.
நாகர்கோவில்: தமிழ்நாட்டில் பல அருவிகள் இருந்தாலும், ஒரு சில மாதங்கள் மட்டுமே அருவியில் தண்ணீர் விழுகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் அனைத்து நாட்களிலும் தண்ணீர் கொட்டுவதை பார்க்க முடிகிறது. வறட்சியான கோடை காலம் என்றாலும் இங்கு சிறிதளவினும் தண்ணீர் விழுந்துகொண்டே தான் இருக்கும். இதனால் தான் திற்பரப்பு அருவி குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி காடுகளில் மூலிகை, இயற்கை வளங்களை அள்ளிக்கொண்டு பாய்ந்தோடிவரும் கோதையாறு திற்பரப்பு அருவியுடன் இணைந்து மூலிகை தண்ணீராக கொட்டுகிறது.பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரும் கோதையாற்றில்தான் பாய்ந்து செல்கிறது. இதனால் மழைக்காலங்களில் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதை பார்க்க முடிகிறது.
இந்த அருவியில் ஆனந்த குளியல் போட வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து பலரும் வேன், பஸ்களில் வந்து விடுகின்றனர். விடுமுறை மற்றும் சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதையும் காண முடிகிறது. உள்ளூர் விடுமுறை, வாரவிடுமுறை என்றாலும் திற்பரப்பு களைகட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.திற்பரப்பு அருவியில் பெண்கள், இளம் வயது சிறுமிகளின் வசதிக்காக தனித்தனியாக குளிக்கும் இடவசதி உள்ளது.
கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஆகவே மக்கள் நீர்நிலைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அதேபோல் தான் திற்பரப்பு அருவிக்கும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக படையெடுத்து வருகின்றனர். கோடை வெயில் காரணமாக அருவியில் குறைந்த அளவே தண்ணீர் பாய்கிறது.இந்தநிலையில் இன்று காலை முதலே திற்பரப்பு அருவியில் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் குவிய தொடங்கினர். அவர்கள் மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் ஆனந்த குளியல் போட்டு சென்றதை பார்க்க முடிந்தது.