ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
சர்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரிக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை சீஸனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும். தற்போது கோடை சீசனுக்காக சுற்றுலா தளங்களை தயார் செய்யும் பணிகள் மாவட்டம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறையால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவிலும் தமிழகத்தில் இருந்து கணிசமான அளவிலும் வந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.
அரசு தாவரவியல் பூங்காவில் காலை முதலே அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை காண முடிந்தது. ஊட்டி ஏரியில், படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் படகு இல்லம் களைகட்டியது. அவர்கள் மிதி படகு, துடுப்பு படகு உள்ளிட்டவற்றில் பயணம் செய்து மகிழ்ந்தனர். மேலும் பைக்காரா படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்தது. முன்னதாக பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சொந்த வாகனம் மற்றும் வாடகை வாகனங்களில் வருவதால், ஊட்டியில் லவ்டேல் சந்திப்பு, சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது தொடர்ந்து கூடுதல் போலீஸார் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வாகனங்களை சாலையோரம் நிறுத்த அனுமதிக்காமல் வாகனங்கள் இருக்கும் இடத்திற்கு திருப்பி விட்டனர். வரும் நாட்களில் தமிழகத்தில் பள்ளி தேர்வுகள் முடிந்தவுடன் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.