ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஏற்காட்டில் விடுமுறை நாளையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு சேலம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் கோடை காலத்தையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு குளுகுளு சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.
இதை கண்டு ரசிக்க நேற்று விடுமுறை நாளையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், அண்ணா பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். மேலும் வனத்துறைக்கு சொந்தமான பூங்காவில் சிறுவர், சிறுமிகள் ஊஞ்சல், சீசா, போன்ற விளையாட்டு உபகரணங்களில் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.
இந்த பூங்காவில் விஞ்ஞான விளக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு காட்டெருமை மற்றும் வனவிலங்குகளின் உருவங்கள் செயற்கையாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. ஏற்காடு வனப்பகுதியில் உள்ள பல்வேறு வகையான மரங்கள், பறவைகள் மற்றும் அவற்றின் எண்ணிக்கை குறித்து விளக்கி கூறப்பட்டிருந்தது. மேலும் வனப்பகுதியில் நிலவும் சத்தத்தை சுற்றுலா பயணிகள் கேட்கக்கூடிய வகையில் இயற்கையின் ஓசை என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டிருந்தது. இ்ங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் சென்று வனப்பகுதியில் நிலவும் இயற்கை ஓசைகளை கேட்டு பரவசமடைந்தனர்.
இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தில் பாதுகாப்பு உடை அணிந்து படகில் சென்று பொழுதை கழித்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. ஏற்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.