முட்டல் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஆத்தூர் அருகே ஆணைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சியில் முட்டல் கிராமம் கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆணைவாரி நீர்வீழ்ச்சி மற்றும் முட்டல் ஏரி வனத்துறையின் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. முட்டல் ஏரியில் படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் வசதி வனப்பகுதியில் பொழுதுபோக்கு வகையில் குடில் பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு ஆத்தூர் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சேலம் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று காலை முதலே குவிந்து நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறுவர்களுக்கான பூங்காவின் மான், காட்டெருமை, யானை உள்ளிட்ட சிலைகளில் சிறுவர்களை பெற்றோர்கள் மேலே ஏற்றி போட்டோ எடுத்தும் விளையாடி மகழ்ந்து வருகின்றனர். அங்குள்ள படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து செல்பி எடுத்தும் வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பால் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.