பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையால் வியாபாரிகள் பாதிப்பு

தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையால், வியாபாரிகள் தினந்தோறும் பாதிக்கப்படுகின்றனர் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

Update: 2024-04-08 02:01 GMT

 பொதுக்குழுக் கூட்டம்

தஞ்சாவூரில் தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் ஆலோசனை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் என்.புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.முருகேசன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மாநகரத் தலைவர் எஸ்.வாசுதேவன், குடந்தை வணிகர் சங்கத் தலைவர் கே.எஸ்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேரவையின் மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.சவுந்தர்ராஜன் கூறியதாவது: மே 5 ஆம் நாளை வணிகர்கள் தினமாக கொண்டாடி வருகிறோம். எங்களது பேரவையி்ன் 41-ஆவது ஆண்டு வணிகர் தின மாநாடு கோவையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான மாநாடாகவும், சில்லரை வியாபாரிகளை பாதுகாக்கும் மாநாடாகவும் அமையும்.  இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வணிகர்கள் பங்கேற்கும் வகையில், மாவட்டம்தோறும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

வருகிற தேர்தலில் எங்களது அமைப்பு சார்பில் யாருக்கும் எந்த ஆதரவும் கிடையாது.  தேர்தல் நேரத்தை பயன்படுத்தி சில அதிகாரிகள் மனசாட்சி இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சோதனை என்ற பெயரில் வணிகர்களை தினந்தோறும் அவதிக்குள்ளாக்கி வருகின்றனர். தேர்தல் ஆணையம் வணிகர்கள் கொண்டு செல்ல வேண்டிய தொகையின் உச்சவரம்பை உயர்த்த வேண்டும்.  பரிசு பொருட்கள் எது, வியாபார பொருட்கள் எது என அதிகாரிகள் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த வணிகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News