தூத்துக்குடியில் காவல் நிலையத்தை வணிகர்கள் முற்றுகை
தூத்துக்குடியில் ஹோட்டலில் வாள், அரிவாளுடன் வந்து தகராறு செய்து சூறையாடியவர்களை கைது செய்ய வலியுறுத்தி வணிகர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையில் ஆதிபராசக்தி நகரைச் சார்ந்த நாராயணன் என்பவர் ஸ்பிக்நகர் எதிரே ஹோட்டல் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி இரவு கடைக்கு உணவருந்த வந்த 2 பேர், புரோட்டா மற்றும் சிக்கன் விலை கூடுதலாக இருப்பதாவும், விலையை குறைத்து தருமாறு கேட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். பின்னர் புரோட்டாவுக்கு பதில் பிரியாணி வாங்கிக் கொண்டு சென்று விட்டனர்.
அதன் பின்னர் மீண்டும் வாள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வந்த அவர்கள் ஆவேசமாக கடையின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். புரோட்டாக்களை ரோட்டில் எடுத்து வீசியும், கடையை அடித்து உடைத்து அவதூறாக பேசியுள்ளனர். இதுகுறித்து ஸ்பிக் நகர் வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பில் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் கடந்த 3ம் தேதி இரவு புகார் அளித்துள்ளனர்.
ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்வதில், தாமதம் ஏற்பட்டது தொடர்ந்து வணிகர்கள் முத்தையாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
தொடர்ந்து இன்று வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து வாணிகர்கள் காவல் நிலையத்தை விட்டு கலைந்து சென்றனர்.