தில்லைநகரில் புதை சாக்கடைப் பணியால் போக்குவரத்து நெரிசல்
தில்லைநகரில் புதை சாக்கடைப் பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்சி மாநகராட்சி சாா்பில் பொலிவுறு நகரத் திட்டத்தில் புதை சாக்கடைப் பணிகள் மற்றும் புதைசாக்கடை குழாய்கள் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக தில்லை நகா் பிரதான சாலையில் சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு சாலையில் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு புதைசாக்கடைத் தொட்டியும்,
குழாய்களும் பதிக்கப்படுகின்றன. இதற்காக சாலையில் 50 சதவீதம் பகுதியை அடைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள இடத்தில்தான் வாகனங்கள் சென்று வருகின்றன.
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்தியப் பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள், அங்கிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் இச் சாலையைத் தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. மேலும், திருச்சியின் பிரதான கடைகள் அனைத்தும் தில்லைநகரில் உள்ளதால் பொதுமக்களும் இந்தச் சாலையைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
இந்நிலையில் இங்கு சாலைப்பணி நடைபெறும் நிலையில் இருபுற போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, காலை, மாலைகளில் கடும் நெரிசல் ஏற்பபடுவதைத் தவிா்க்க முடியவில்லை.
மாநகராட்சியின் திட்டமிடாத பணிகளால் தொல்லை ஏற்படுவதாகவும், மேலும் தற்போதுதான் தாா்ச்சாலை புதிதாக அமைத்திருந்த நிலையில் சாலையை மீண்டும் தோண்டி பள்ளம் ஏற்படுத்தியிருப்பதால் பணிகள் முடிந்தாலும் வாகனப் போக்குவரத்துக்குச் சிரமம்தான் என்கின்றனா் இப் பகுதி மக்கள்.