மூங்கில் மண்டபம் பகுதியில் போக்குவரத்து குளறுபடி
மூங்கில் மண்டபம் பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் குளறுபடியாக இருப்பதால், சீரமைக்க நடவடிக்கையை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் நகரில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களாக, மேட்டுத் தெரு, கீரை மண்டபம், பேருந்து நிலையம், மூங்கில் மண்டபம், செங்கழுநீரோடை வீதி, ரயில்வே ரோடு ஆகிய பகுதிகள் உள்ளன. இதில் மூங்கில் மண்டபம் பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக மேட்டுத் தெருவுக்கு கார், சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. காந்தி ரோடு வழியாக ஒரு வழிப்பாதையாக திருப்பி விடப்பட்டுள்ளன.
அதேபோல, மூங்கில் மண்டபம் பகுதியில் சிக்னல் முறை அகற்றப்பட்டுவிட்டன. இதனால், மேட்டுத் தெருவிலிருந்து பேருந்து நிலையத்திற்கு வாகனங்கள் நேராக அனுமதிக்கப்படுகின்றன. இந்த நடைமுறையால், மடத்தெருவிலிருந்து காந்தி ரோடுக்கு செல்லும் வாகன ஓட்டிகளும், காந்தி ரோட்டிலிருந்து மடத்தெரு செல்லும் வாகன ஓட்டிகளும் அன்றாடம் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மடத்தெருவில் இருந்து காந்தி ரோடு செல்ல, மூங்கில் மண்டபத்தில் சாலையை கடக்கும்போது, மேட்டுத் தெருவிலிருந்து வரும் வாகனங்கள் நிற்காமல் வந்தபடியே இருக்கின்றன.
போக்குவரத்து போலீசாரும், வாகனங்களை நிறுத்தி அனுமதிப்பதில்லை. மடத்தெருவிலிருந்து காந்தி ரோடு செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடுவோமோ என்ற அச்சத்துடனே அங்கு சாலையை கடக்கின்றனர். மூங்கில் மண்டபம் பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் குளறுபடியாக இருப்பதால், காஞ்சிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர், போக்குவரத்து நடவடிக்கையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.