விருதுநகர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கான பயிற்சி வகுப்பு
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிராம சுகாதார செவிலியர்களுக்கான பயிற்சி வகுப்பினை ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் சமூக அளவிலான சிசு மற்றும் பிறந்த குழந்தைகள் பராமரிப்பு குறித்து கிராம சுகாதார செவிலியர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் குத்திவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இப்பயிற்சியின் போது, செவிலியர்களுக்கு அதிக ஆபத்துள்ள கர்ப்பம், கர்ப்ப காலத்தில் இரத்தசோகை, பிரசவமுறை, பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு மற்றும் சரியான நேரத்தில் பரிந்துரைக்கும் அணுகு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆபத்தில் இருக்கும் சிசுக்களைப் பராமரிப்பது,
பிறந்த குழந்தைகளின் மறுமலர்ச்சி போன்றவை குறித்தும் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பேசுகையில், கடந்த 20 வருடங்களுக்கு முன்னால் இருந்த பிரவசத்தின் போது ஏற்படக்கூடிய தாய்மார்களின் இறப்பு விகிதம் தற்போது மிக மிக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு தொடர்ச்சியான விழிப்புணர்வும்,
இரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு, சிறு வயது திருமணம் உள்ளிட்ட காரணிகளை குறைப்பதற்கு எடுக்கப்பட்ட செயல்பாடுகளே காரணமாகும். மேலும், செவிலியர்கள் தங்கள் பகுதிகளில் இருக்கும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான கண்காணிப்பு, விழிப்புணர்வு, அறிவுரைகளும் ஒரு காரணமாக அமைகிறது.
தற்போது சிசு மற்றும் பிறந்த குழந்தைகள் குறிப்பாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் நமது மாவட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கு கருவுற்ற நாள் முதல் தொடர்ச்சியான கண்காணிப்பு, தாய்மார்களின் ஊட்டச்சத்து,
பாலூட்டும் முறைகள், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து, மருந்துகள் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்த வேண்டும்.இது ஒரு தொடர்ச்சியான சங்கிலி செயல்பாடு. இந்த தொடர்ச்சியான சங்கிலி செயல்பாட்டில் ஒரு மிக முக்கியமான நபராக, அவர்களோடு நேரடியாக கிராமங்களில் பேசக்கூடிய, தினசரி பார்க்கக்கூடிய முக்கியமான நபராக இருக்கக்கூடிய கிராம சுகாதார செவிலியர்கள் இது குறித்த விழிப்புணர்வை தாய்மார்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் எடுத்து கூறி அவர்களை கவனமாக தொடர்ச்சியாக கண்காணிப்பதன் மூலம் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.