வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
தஞ்சாவூரில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்ட அரங்கில் 2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை கையாளுவது குறித்து பயிற்சி வகுப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணும் பணியினை மேற்கொள்ள ஏதுவாக அலுவலர்களை நியமனம் செய்திட குலுக்கல் முறையிலான முதல் தேர்வு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களில் கடந்த ஏப். 19 வெள்ளிக் கிழமை அன்று நடைபெற்றது. தற்பொழுது, மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் ஜூன்.04 வியாழக் கிழமை அன்று நடைபெறவுள்ளது.
அதனை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை நாளன்று வாக்கு எண்ணும் பணியினை மேற்கொள்ள ஏதுவாக அலுவலர்களை நியமனம் செய்திட குலுக்கல் முறையிலான முதல் தேர்வு (First Randomization) மற்றும் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சியில், தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலிருந்து நியமனம் செய்யப்படவுள்ள அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.