மயிலாடும்பாறையில் பயணியர் நிழற்குடை பாழ்
மயிலாடும்பாறையில் கால்நடைகளை கட்டி வைக்கும் தொழுவமாக மாறியுள்ள பயணியர் நிழற்குடையை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், மயிலாடும்பாறை கிராமம், நகர்ப்புறத்தில் இருந்து விலகி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு ஆர்.கே. பேட்டையில் இருந்து அரசு பேருந்து தடம் எண்: டி 52 மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ஒரு பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் வசதிக்காக, ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. தினமும் இரண்டு முறை மட்டுமே வந்து செல்லும் பேருந்துக்காக பகுதிவாசிகள் காத்திருக்காமல், ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கின்றனர்.
இதனால் இங்குள்ள நிழற்குடை பயனின்றி வீணாகி வருகிறது. இந்நிலையில் இந்த நிழற்குடையை, கால்நடைகள் கட்டி வைக்கப்படும் தொழுவமாக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நிழற்குடை பாழாகி வருகிறது. இந்த மார்க்கத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும், நிழற்குடையை முறையாக பராமரிக்கவும் பகுதி வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.