பேருந்து வசதி வேண்டி பழங்குடியினர் முற்றுகை

ஊட்டி அருகே பழங்குடியின கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-27 04:45 GMT

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்புநாள் கூட்டம் ஆட்சியர் அருணா தலைமையில் நடந்தது. இதில் ஊட்டியை அடுத்த கொரனூர் காலனியை சேர்ந்த ஆதி திராவிடர் மக்கள் மற்றும் பிக்கபத்திமந்து கிராமத்தை சேர்ந்த தோடர் பழங்குடியின மக்கள் தங்கள் கிராமங்களுக்கு பஸ் இயக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- எப்பநாட்டில் இருந்து 4கி.மீ., தொலைவில் உள்ள பிக்கபத்து மந்து கிராமத்தில் 25 வீடுகளும், எப்பநாட்டில் இருந்து 2கி.மீ., தொலைவில் உள்ள கொரனூர் காலனியில் 30 வீடுகளும் உள்ளன. பல ஆண்டுகளாக எப்பநாட்டில் இருந்து, இரவு நேரத்தில் எங்களது சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் போது வனவிலங்குகள் தாக்குதல் இருந்தது. எனவே எங்கள் ஊருக்கு அரசு பேருந்து இயக்க கோரிக்கை விடுத்த்தோம்.

அதன் அடிப்படையில் தற்போது ஊட்டியில் இருந்து எப்பநாடுக்கு 6.15 மணிக்கு புறப்படும் பேருந்தை கொரனூர் வரை இயக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி இரவு 7 மணிக்கு எப்பநாட்டிற்கு வந்த அரசு பேருந்தை ஊர் தலைவர் தலைமையில் பொதுமக்கள் மறித்து பேருந்திலிருந்த பெண்கள் உள்பட பயணிகளை இறக்கி விட்டனர். மேலும் கொரனூருக்கு பேருந்து வராது என்று கூறி விட்டனர். எனவே கொரனூருக்கு அரசு பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கிராமங்களுக்கு பேருந்து இயக்க உத்தரவிடப்பட்டும், குறிப்பிட்ட சமுதாயத்தினர் எங்கள் கிராமங்களுக்கு பேருந்தை இயக்கக் கூடாது என்று வலியுறுத்துகின்றனர். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறினர்.

Tags:    

Similar News