திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
பிரசித்தி பெற்ற திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 21ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
இலக்குமி நாயகனாகவும், வைகுந்தவாசனாயும் ஆதிமூலமாகவும் இருக்கின்ற எம்பெருமான் வைகுந்தத்தில் இருந்து பூலோகத்தில் உள்ள பக்த கோடிகளுக்கு எல்லா செல்வங்களையும் அருள்புரிய வேண்டுமென்று திருவுள்ளம் பற்றி ஆங்காங்கு வழிபடும் மூர்த்தியாய் பகவான் திருஅவதாரம் செய்தருளினார்.
இவற்றுள் கற்றோர் நிறைந்த நற்பதியாம், சோழவள நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் கல்லுக்குழி என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் வழங்க நின்ற திருக்கோலத்தில் அருள் பாலித்து வரும் ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில், பிள்ளையார், ஸ்கந்தன், நவக்கிரகம், ஆஞ்சநேயர் மூலவர், உற்சவர் . யோகநரசிம்மருடன் கூடிய ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மூலவர், உற்சவர், ஸ்ரீ பாண்டு ரங்கசுவாமி மூலவர், நூதனமாக பாண்டு ரங்கசுவாமி உற்சவமூர்த்தி, நூதனமாக பாதுகை (சடாரி) ராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், யாகசாலை விமானம் மற்றும் உள்ள பரிவாரமூர்த்திகளுக்கும் அனைத்து விமானங்களுக்கும் தை மாதம் 7-ஆம் நாள் (21.01.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குமேல் 11.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்கிறது.
விழா நாட்களில் நாதஸ்வர கச்சேரியும், பக்தி மெல்லிசையும் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் மங்கள இசையுடன் காவிரி ஆற்றில் இருந்து யானை மூலம் புனித நீர் எடுத்து வரப்படுகிறது. அதைத்தொடர்ந்து அன்று மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜை மற்றும் புண்யாகவாஜனம், ரக்ஷாபந்தனம், வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம் போன்றவை நடக்கின்றன.
20-ம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகளும் மற்றும் பூஜைகளும் நடக்கின்றன. 21ம் தேதி( ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜை மற்றும் பூஜைகளும் காலை 10 மணி முதல் 11-30 மணிக்குள் விமானம் மற்றும் மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும், சாற்று முறைகள், தீர்த்த பிரசாதம் வழங்குதல், பஞ்ச தரிசனம் ஆகியவை நடக்கின்றன. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடக்கின்றன.