கோவில்பட்டி கல்லூரியில் முப்பெரும் விழா
ஓவியமணி சி. கொண்டையராஜுவின் 125 ஆவது பிறந்த நாள், ஓவிய கண்காட்சி, நூல் வெளியீடு என முப்பெரும் விழா கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி கலையரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், ஓவியக் கண்காட்சி - நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு கல்லூரியின் துணைத் தலைவா் கே.ஆா். கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். ஓவியமணி சி. கொண்டைய ராஜுவின் உருப்படத்துக்கு, அவரும், கல்லூரி தாளாளா் கே.ஆா். அருணாச்சலம், கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ, செயலா் சங்கரநாராயணன், நிா்வாக குழு உறுப்பினா்கள் கே. விஜயலட்சுமி, சி. ராமசாமி ஆகியோரும் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, ‘ஓவியமணி சி. கொண்டையராஜுவின் கலைப்பொக்கிஷம் 125’ என்ற நூலை கல்லூரி துணைத் தலைவா் வெளியிட, முதல் பிரதியை எம்எல்ஏ பெற்றுக் கொண்டாா். சித்திரம் கலைக் கூட மாணவி ஆா். தான்யலட்சுமி, சி. கொண்டையராஜு குறித்துப் பேசினாா். கண்காட்சியில் சி. கொண்டையராஜு வரைந்த 500க்கும் மேற்பட்ட இந்து சமய சைவ, வைணவ தெய்வப் படங்கள், ஓவியங்கள் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியில், கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா்கள் காளிதாச முருகவேல் (நேஷனல் பொறியியல் கல்லூரி), ராஜேஸ்வரன் (லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக்), மதிவண்ணன் (கே.ஆா்.கலை அறிவியல்), உள்பட பலா் கலந்து கொண்டனா். கல்லூரி உதவி பேராசிரியா் தம்பா வரவேற்றாா். சித்திரம் கலைக்கூட ஓவியா் காா்த்திகை செல்வம் நன்றி கூறினாா். இக்கண்காட்சி இன்று மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.