சோமேஸ்வரர் திருக்கோவிலில் திருவீதி உலா
காளையார்கோவில் சோமேஸ்வரர் திருக்கோவிலில் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது.
Update: 2024-05-18 08:53 GMT
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் நகரில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க ஸ்ரீ சௌந்தரவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ சோமேஸ்வரர் திருக்கோவிலில் வைகாசி விசாக பெருவிழா முன்னிட்டு மூன்றாம் திருநாள் காளையார்கோவில் மின்வாரிய ஊழியர்கள் மண்டப படி திருநாளில் உற்சவ தெய்வங்கள் ரிஷப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இவ்விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் சுவாமி ரிஷப வாகனத்தில் பவனி வந்தனர். முன்னதாக திருநாள் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீ சோமேஸ்வரர் சுவாமி பிரியாவிடை அம்மன் மற்றும் ஸ்ரீ சௌந்தரவல்லி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து தெய்வங்களுக்கு தீப துப ஆராதனை காண்பித்து அலங்கார தீபம் ஏக முக தீபம், கும்ப தீபம் மற்றும் ஷோடச உபச்சாரங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதனை அடுத்து சுவாமி அம்மனை ரிஷப வாகனத்திலும் ஸ்ரீ சௌந்தரவல்லி அம்பாளை அன்ன பறவை வாகனத்திலும் எழுந்தருள செய்தனர். இதனைத் தொடர்ந்து மங்கல வாத்தியங்களுடன் கோவில் யானை முன் செல்ல தெய்வங்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.