சேலம் அருகே லாரி மோதி விபத்து: இளம் பெண் உடல் நசுங்கி பலி
சேலம் அருகே லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயரிழந்த இளம்பெண்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
By : King 24x7 Angel
Update: 2024-02-13 11:03 GMT
சேலம் மெய்யனூர் அண்ணாபுரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் சந்தியா (வயது 22). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஈரோட்டில் சேலை வாங்கி சேலத்தில் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் சந்தியா இன்று காலை சேலத்தில் இருந்து ஸ்கூட்டரில் ஈரோட்டுக்கு சேலை வாங்குவதற்காக புறப்பட்டு சென்றார். சேலம் -கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூரை அடுத்த சூளைமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து கோபி நோக்கி பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு லாரி அவர் மீது மோதியது. இதில் 50 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட சந்தியா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உறவினர்கள் அங்கு விரைந்து வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.