லாரிகள் தீப்பிடித்து எரிந்து சேதம் - ரூ.90 லட்சம் பொருட்கள் நாசம்
நாமக்கல் அடுத்த முதலைப்பட்டிபுதூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி நள்ளிரவு 1.30 மணி அளவில் தீப்பிடித்து எரிவதை கண்ட வழியாக சென்ற பொதுமக்கள் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் தீயணைப்பு துறையினர் ஜவுளி சரக்கு பாரத்துடன் இருந்த லாரி மற்றும் அருகில் இருந்த காலி லாரி, டேங்கர் லாரி உள்ளிட்டவைகள் தீப்பற்றி எரிவதை அறிந்து உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்ததால் உடனடியாக ராசிபுரம், திருச்செங்கோடு பகுதிகளிலிருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நல்லிபாளையம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நாமக்கல் அடுத்த எர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் ஜவுளி பாரத்துடன் லாரியையும், சேந்தமங்கலத்தைச் சேர்ந்த மாதவி என்பவரது டேங்கர் லாரியும், அதேபோல் நாமக்கல்லை சேர்ந்த உழவன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு சொந்தமான காலி லாரியும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதில் ஜவுளி பாரத்துடன் நின்ற லாரியும், காலியாக இருந்த லாரியும் முழுமையாக எரிந்து போன நிலையில், டேங்கர் லாரி பாதியளவு எரிந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த ஜவுளி பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. சேத மதிப்பு ரூ.90 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்தும் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்தும் நல்லிபாளையம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.