படப்பையில் சாலை ஒரம் கழிவுநீர் கொட்டும் லாரிகள்
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் நெடுஞ்சாலையோரம் கழிவுநீர் கொட்டும் லாரிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Update: 2024-02-18 07:33 GMT
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்தில், படப்பை ஊராட்சி அமைந்துள்ளது. படப்பை மற்றும் அதை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் தினமும் டேங்கர் லாரிகள் வாயிலாக கழிவுநீர் அகற்றப்படுகிறது. கழிவுநீரை டேங்கர் லாரிகள், சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று வழங்காமல், வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், கீழ் படப்பையில் உள்ள தனியார் பள்ளி அருகே கொட்டுகின்றனர்.
கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கிறது. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. படப்பையில், பொது இடத்தில் கழிவுநீர் கொட்டும் லாரி உரிமையாளர்கள் மீது மணிமங்கலம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.