தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
காரைக்குடி சுற்றுவட்டார பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது.
Update: 2024-04-09 07:34 GMT
காரைக்குடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு நடைபெற்று வந்தது. இதுகுறித்து சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உத்தரவின் பேரில் காரைக்குடி டி.எஸ்.பி., பிரகாஷ், குற்றப்பிரிவு ஆய்வாளர் இளவரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் காரைக்குடி கழனிவாசல் பாண்டியன் நகர் செக் போஸ்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த இருவர் போலீசார் நிற்பதை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், பைக் ஓட்டி வந்தது புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கொத்தமங்கலத்தைச் சேர்ந்த கதிர்வேல் மகன் கண்ணன் என்பது தெரியவந்தது. இவர் மீது 40-க்கும் மேற்பட்ட பைக் திருட்டு வழக்கும், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதும் தெரிய வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தவர், காரைக்குடி பேயன்பட்டி ஜீவா நகர் பாண்டி மகன் தனுஷ்கோடி என்பவருடன் சேர்ந்து கழனிவாசல், பர்மா காலனி உட்பட பல்வேறு பகுதிகளில் 6 பைக்குகளை திருடியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.