இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் உள்பட 2பேர் கைது
சேலத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம், சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமிக்கு கடந்த ஜனவரி மாதம் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து அந்த சிறுமியை சிகிச்சைக்காக பெற்றோர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமிக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் 8 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அந்த சிறுமியிடம் 2 பேர் உல்லாசமாக இருந்து கர்ப்பிணியாக்கியது தெரியவந்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீசார் கூறியதாவது, பாதிக்கப்பட்ட சிறுமி சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (44) என்பவரது பேக்கரி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அவருக்கும், நரசோதிப்பட்டி பெருமாள் மலை அடிவாரம் பகுதியை சேர்ந்த பெயிண்டரான குணசேகரன் (20) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இந்த நிலையில் அந்த சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு குணசேகரன் அங்கு சென்றுள்ளார்.
அப்போது அவர் சிறுமியிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதனிடையே அந்த சிறுமியிடம் கடை உரிமையாளர் பிரபாகரன் என்பவரும் உல்லாசமாக இருந்துள்ளார். அதாவது அவர் சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து உல்லாசமாக இருந்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமி தான் கர்ப்பமானது குறித்து தெரியாமலேயே வீட்டில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் வயிற்றுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த பிறகு தான் அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் நிறைமாத கர்ப்பிணியான அந்த சிறுமி இன்னும் ஓரிரு நாட்களில் பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட உள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.மேலும் சிறுமியை கர்ப்பமாக்கிய குணசேகரன், பிரபாகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.