ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணி : வாலிபர் சங்கம் நூதன போராட்டம்
திருச்சியில் பல ஆண்டு காலமாக பாதாள சாக்கடை பணி என்ற பெயரில் மெத்தனமாய் பணி செய்யும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் பால் ஊற்றி போராட்டம் நடந்தது.
திருச்சி மாநகராட்சி 41வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலைக்கு பால் ஊற்றும் போராட்டம் நடந்தது.போராட்டத்திற்கு காட்டூர் பகுதி செயலாளர் சந்தோஷ் மாவட்ட துணை செயலாளர் நிவேதா ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகராட்சி 41 வது வார்டுக்கு உட்பட்ட நவல்பட்டு சாலையில் பாதாள சாக்கடை பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம் ஆமை வேகத்தில் செயல்பட்டு வருவதுடன் இதனால் சாலைகள் மிகவும் மோசமாகவும் குண்டும் குழியுமாக மாறி வருகிறது. மேலும் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலைகள் சேரும் சகதியும் உள்ளதாலும்.
இதனை கண்டித்து பால் ஊற்றும் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு41 வது வார்டு கவுன்சிலர் கோவிந்தராஜன், பொறுப்பு மாநகராட்சி அதிகாரி நரசிங்க மூர்த்தி உட்பட பலரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு இன்னும் 15 நாட்களில் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என உறுதியளித்தனர். இந்த நிலையில் திட்டமிட்டது போல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பால் ஊற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு சாலையில் வைக்கப்பட்டுள்ள எல் அண்டு டி பேரிகாடியில் பால் ஊற்றி கண்டன கோஷங்களை எழுப்பினர்