குமரியில் பல்கலைகழக அளவிலான கைப்பந்து போட்டி
குமரி மாவட்டம் கருங்கல் அருகே சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆடவர் கைப்பந்து போட்டி 2 நாள் நடந்தது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 15 அணிகள் பங்கேற்றன. போட்டியின் நிறைவு விழா கல்லூரி அரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குனர் ஆறுமுகம், கன்வீனர் ஜான் ரஸ்கின் ஆகியோர் பங்கேற்றனர்.
போட்டியில் முதலிடத்தை சங்கரன்கோவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கலைக்கல்லூரியும், 2வது இடத்தை தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியும், 3வது இடத்தை புனித அல்போன்சா கல்லூரியும், 4வது இடத்தை அம்பை ஆர்ட்ஸ் கல்லூரியும் பிடித்தன.
பல்கலைக்கழக அளவில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு புனித அல்போன்சா கல்லூரி தாளாளர் பேரருட்பணியாளர் ஆன்றனி ஜோஸ், முதல்வர் அருட்பணியாளர் முனைவர் மைக்கேல் ஆரோக்கியசாமி, கல்லூரி வளாக வழிகாட்டி அருட்தந்தை அஜின் ஜோஸ், துணை முதல்வர் சிவனேசன் ஆகியோர் பரிசு, கேடயங்களை வழங்கினர்.