மரக்காவலசையில் சுகாதாரமற்ற குடிநீர் வழங்குவதாக பொதுமக்கள் புகார்

சுகாதாரமற்ற குடிநீர் வழங்குவதைக் கண்டித்து, மரக்காவலசை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெருந்திரள் நுழைவு போராட்டம்  நடந்தது.

Update: 2024-02-09 13:48 GMT

கழுமங்குடா பகுதியில், பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் வழங்குவதைக் கண்டித்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தில், பெருந்திரள் நுழைவுப் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி தலைமையில், சேதுபாவாசத்திரத்தில் நடைபெற்றது.

மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் வீ.கருப்பையா, கிளைச் செயலாளர் அகிலன்,  பி.பெரியண்ணன், நாகேந்திரன் உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், "சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மரக்காவலசை ஊராட்சிக்கு உட்பட்ட 4ஆவது வார்டு கழுமங்குடா புதுத் தெரு பகுதியில், குடிநீர்க் குழாய் சாக்கடை கழிவுநீர் வாய்க்காலுக்குள் புதைக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் சுகாதாரமற்ற முறையில் கழிவு நீர் கலந்து, அடிக்கடி காய்ச்சல், பேதி, காலரா உள்ளிட்ட நோய்கள் உருவாகின்றன. 

மேலும்,  குடிநீர் துர்நாற்றத்துடன் உள்ளது. இந்த குடிநீர்க் குழாயை சாக்கடை கழிவுநீரில் இருந்து அப்புறப்படுத்தி, பாதுகாப்பான முறையில் அமைத்து, சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், எதிர்வரும் பிப்ரவரி 13ஆம் தேதி மரக்காவலசை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இப்பகுதி பெண்கள், குழந்தைகள், பொதுமக்களுடன் பெருந்திரளாக நுழைந்து காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்" இவ்வாறு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News