ஏரியாக மாறிய காலி நிலத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம் !
மழைநீருடன், குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-06-14 06:13 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு நகராட்சி அமைந்துள்ளது. இங்கு, குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது வரை பாதாள சாக்கடை திட்டம் இல்லை. இந்நிலையில், குன்றத்துார் - குமணன்சாவடி நெடுஞ்சாலையோரம்,மாங்காடு பேருந்து நிலையம் அருகே, காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் தனியாருக்கு சொந்தமான 8 ஏக்கர் காலி நிலம் உள்ளது. இந்த நிலத்தின் அருகே இருந்த மழைநீர் வடிகால்வாய்கள் குடியிருப்புகளாக மாறியதால், தண்ணீர் செல்ல போதிய வழியில்லை. இதனால், அண்மையில்பெய்த சாதாரண மழைக்கே, தண்ணீர் தேங்கி ஏரி போல் காட்சியளிக்கிறது. மழைநீருடன், குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. மழைநீர் வெளியேற்ற மாங்காடு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.