திருப்பரங்குன்றம்: வைகாசி விசாக திருவிழா தொடக்கம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
வருகிற 22 ஆம் தேதி வைகாசி விசாகம் நடைபெறுவதை ஒட்டி அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது.
தொடர்ந்து வெட்டிவேர், விளாம்பச்சை வேர் உள்ளிட்ட மாலை அணிந்து தங்க ஆபரண அணிகலன்களுடன் மண்டபத்தில் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும்., பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க சுப்பிரமணிய சுவாமிக்கு வலது கையில் காப்பும் தெய்வானையம்மனுக்கு இடது கையிலும் காப்பு கட்டப்பட்டு வைகாசி விசாகத் திருவிழா விமர்சையாக தொடங்கியது.
தொடர்ந்து, சிறப்பு ஆராதனை நடைபெற்ற பின் உற்சவர் மண்டபத்தில் இருந்து தெய்வானையம்மனுடன் புறப்பட்ட சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருவாச்சி மண்டபத்தை சுற்றி வந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். வசந்த மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையம்மனுக்கு ஊஞ்சலில் அமர்ந்து ஊஞ்சல் உற்சவசேவை நடைபெற்றது. பின்னர் சுப்பிரமணியசாமி தெய்வானை மீண்டும் உற்சவர் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். விழாவையொட்டி தினம்தோறும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுடன் பல்வேறு அலங்காரங்களில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.