வேன் கவிழ்ந்து விபத்து
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆற்காடு தாலுகா, கிளம்பாடி கிராமத்தைச் சேர்ந்த 20 பேர் மகேந்திரா கேப் வேனில் நேற்று திருக்கோவிலூரில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி பங்கேற்று திரும்பினர். வேனை அதே பகுதியைச் சேர்ந்த சீனுவாசன் மகன் பாலசுப்ரமணியன், 37; ஓட்டிச் சென்றார்.
மதியம் 2:20 மணியளவில் டி.அத்திப்பாக்கம் வாகன சோதனைச் சாவடி அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையில் கவிழ்ந்து சிறிது தூரம் இழுத்துச் சென்றது. இதில் வேனில் இருந்த பாப்பம்மாள், 70; வேனின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு முன்னால் விழுந்தார்.
அவர் மீது வேன் உருண்டு உரசியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், வேனில் பயணம் செய்த பூச்சியம்மாள், 55; சுப்ரமணி மகன் பாரதி, 37; அவரது மனைவி சாந்தி, 30; வேடியம்மாள், 70; மற்றும் டிரைவர் உட்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடன் காயமடைந்த அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வேனை அதிவேகமாக ஓட்டியதே விபத்து ஏற்பட காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். விபத்து குறித்து மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.