பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பந்தட்டை மற்றும் பெரிய வடகரை ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேப்பந்தட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற செயலகம் கட்டப்பட்டு வருவதையும், ரூ.16.46 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கக் கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து பெரிய வடகரை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.86 லட்சம் மதிப்பீட்டில் பிசி தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.10.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மைய கட்டடத்தினையும் பார்வையிட்டார்.
பின்னர் ரூ.10.91 லட்சம் மதிப்பீட்டில் பெரியவடகரை ஊராட்சி மாவலிங்கை கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமான ஏரி ஆழப்படுத்தி படித்துறை கட்டி முடிக்கப்பட்ட பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கரைகளில் பனை மற்றும் இதர மரங்களை வளர்ப்பதற்கு ஏதுவாக பனை விதைகளையும், மரக்கன்றுகளையும் நட வேண்டும் என்று ஊராட்சி மன்றத்தலைவருக்கு அறிவுறுத்தினார். மேலும், அந்த ஏரிக்கு தண்ணீர் வர ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள வரத்து வாய்க்கால்களை முழுவதும் துார்வாரிட வேண்டும் என்றும், வரத்து வாய்க்கால்கள் அமைந்துள்ள இடங்களில் முறையாக நில அளவையர் மூலம் அளந்து யாரேனும் வரத்து வாய்க்கால்களை ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அந்த நிலங்களை உடனடியாக மீட்டெடுத்து, ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.
பின்னர் பெரியவடகரை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாலை 6 மணிக்கு படித்துக்கொண்டிருந்த மாணவ மாணவிகளைப் பார்த்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் கலந்துரையாடினார். இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலம் அவர்களுக்கு வகுப்பெடுக்கப்பட்டு வருவதாக தன்னார்வல ஆசிரியர் தெரிவித்தார். மாணவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் நன்றாக படிக்க வேண்டும் என வாழ்த்தினார். இந்நிகழ்வின்போது, வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமணி, வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலக மேலாளர் மாலதி, ஊராட்சி மன்றத்தலைவர் முருகேசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.