வேலூர் : நேதாஜி மார்க்கெட்டில் பீன்ஸ் விலை 'கிடு கிடு' உயர்வு
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்கள் மற்றும் ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து லாரி, டெம்போ போன்ற வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. அதே போன்று வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறி கள் மொத்தம் மற்றும் சில்லரை விலையில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து குறைவால் பீன்ஸ் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. கடந்த வாரம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் அதிகரித்து ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனால் காய்கறி வாங்க சென்ற பொதுமக்கள், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 2 நாட்களாக பீன்ஸ் குறைந்தளவே மார்க்கெட்டிற்கு வந்தது. முகூர்த்ததினம் என்பதால் அவற்றை மொத்தமாக பலர் வாங்கி சென்றனர். அதனால் பீன்ஸ் விலை கடுமையாக அதிகரித்தது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.