பேருந்து இயக்கம் குறித்து ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து சேவை தடையின்றி இயக்கப்படுவதை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-01-10 01:57 GMT

பேருந்து இயக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஒரு சில தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்ததை அறிவித்துள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து சேவை தடையின்றி இயக்கப்படுவதை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். வேலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் நகரப் பேருந்துகள் எண்ணிக்கையில் இன்றைய தினம் இயக்கப்பட்ட பேருந்துகளின் விவரங்களை போக்குவரத்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லும் பேருந்துகளின் விவர பதிவேடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து பேருந்து நிலையத்திலும், பேருந்துகளிலும் இருந்த பொதுமக்களிடம் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கான பேருந்துகள் நேர விவரப்படி இயக்கப்படுகிறதா என கேட்டறிந்தார். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் பேருந்துகளை இயக்கும்போது ஏதேனும் பிரச்சனைகள் உள்ளனவா எனவும் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் 90 முதல் 95 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், ஒவ்வொரு பேருந்து பணிமனைகளிலிருந்தும் பேருந்துகள் செல்ல வேண்டிய வழித்தடங்களில் இயக்கப்படுவது போக்குவரத்து மேலாளர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பொதுமக்களின் பயணங்கள் பாதிக்காத வகையில் எவ்வித தடையுமின்றி பேருந்துகள் இயக்கப்படுவது மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலரும் மற்றும் காவல்துறையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அனைத்து பேருந்துகளையும் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News