விஜயபாஸ்கர் இல்லத்தில் அமலாக்க துறையினர் சோதனை!
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லத்தில் அமலாக்க துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், அதிமுக வடக்கு மாவட்ட கழக செயலாளருமான டாக்டர் .சி. விஜயபாஸ்கர் இல்லத்தில் அமலாக்க துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர். சி .விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்தாக கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வருமான வரித்துறையினர் இவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். பின்னர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தற்பொழுது அந்த வழக்கானது புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் இல்லத்தில் இன்று காலை முதல் அமலாக்க துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர் மதுரை ,சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து எட்டுக்கும் அதிகமான அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்பொழுது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இருக்கும் சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சியோடு அதிமுக கூட்டணி வைக்காமல் ஒதுங்கியதால் இந்த சோதனை நடைபெறுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் முன்னாள் அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் இல்லத்தில் இந்த ரெய்டு நடப்பதால் அப்பகுதியில் உள்ள அதிமுகவினர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவிலேயே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அதிமுக வினரிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது என்று கூறலாம்.