ஆசையாக கட்டிய வீட்டை பார்க்காமலேயே மீளாத் துயில் கொண்ட விஜயகாந்த்
ஆசையாக கட்டிய வீட்டை பார்க்காமலேயே விஜயகாந்த் மறைந்தது தெரியவந்துள்ளது.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயாகந்த் நேற்று காலை காலமானார். சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீடு மற்றும் அலுவலங்களில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.
கட்டுக்கடங்காத கூட்டத்தால் அவரது உடலை ராஜாஜி ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்க அனுமதிக்குமாறும் தமிழக அரசுக்கு தேமுதிக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதேபோல் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையும் விஜயகாந்தின் உடலை ராஜாஜி ஹாலில் வைக்க அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தார்.
கோரிக்கைகளை பரிசீலித்த தமிழக அரசு, சென்னை தீவுத்திடலில் காலை 6 மணி முதல் 1 மணி வரை விஜயகாந்தின் உடலை வைக்க பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்க அனுமதி அளித்தது. இதையடுத்து காலை 6 மணி முதல் விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலு இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 4.45 மணிக்கு தேமுதிக அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் விஜயகாந்த் கட்டி வரும் புதிய வீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜயகாந்த் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் தான் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் அட்கோ நகர் பகுதியில் சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் புதிய வீட்டை கட்டத் தொடங்கினார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் அந்த வீட்டை கட்டி வந்தார் விஜயகாந்த். இந்த வீட்டின் பணிகள் மெல்ல நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில்தான் வேகம் எடுத்தது. கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் இந்த வீட்டில் பால் காய்ச்சப்பட்டதாக கூறப்படுகிறது.
உடல் நலக்குறைவு காரணமாக அந்த நிகழ்ச்சியில் கூட விஜயகாந்த் பங்கேற்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் நல்ல உடல்நிலையுடன் இருந்தபோது கட்ட தொடங்கப்பட்ட இந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்றும் குடும்பத்தினர் ரொம்பவே மெனக்கெட்டுள்ளனர்.
ஆனால் கடைசி வரை கேப்டன் அந்த வீட்டில் வசிக்க முடியாமல் போய்விட்டது. ஏற்கனவே மகன்களின் திருமணத்தை பார்க்காமலே போய்விட்டார் என்று தொண்டர்களும் ரசிகர்களும் கண்ணீர் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆசையாக கட்டிய வீட்டில் கூட விஜயகாந்தால் வசிக்க முடியாமல் போய்விட்டது என கதறி வருகின்றனர்.